ஒக்கலிகர் - ஈமச் சடங்கு


ஒக்கலிகர் சமூகத்தைப் பற்றி ஆராய்ச்சியாளர்களின் ஆய்வுப்படி இச்சமூகத்தின் தோற்றம் இமயமலைப் பகுதியாக இருப்பதால் இச்சமூகத்தின் சடங்குகள் திராவிட நாகரிகத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. 


இச்சமூகத்தில் ஒரு மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை நிகழும் எல்லா நிகழ்வுகளிலும் தாய்மாமன் பங்கு முக்கியத்துவம் பெறுகிறது

ஈமச் சடங்கு 

ஒக்கலிகர் சமுதாயத்திற்கு என பொதுவாக அந்தந்த ஊர்களில் ஈமச்சடங்குக்கென இறந்தவர்களை அமரச் செய்யும் நாற்காலி அல்லது A/C Freezer Box,கம்பளி தமனை கட்டை போன்ற பொதுவான பொருட்கள் வைத்திருப்பர். 

எவரேனும் இறந்து விட்டால் இறந்தவரின் உறவினர்கள் அவரைக் குளிப்பாட்டி சமுதாயத்திற்குப் பொதுவான நாற்காலியில் அமர்த்தி இறந்தவரின் இல்லத்தில் உள்ளவரது பட்டுப்புடவையை இறந்தவர் மீது போர்த்தி வீட்டுச் சார்பாக ஒரு பூமாலையை அணிவித்து நெற்றியில் ஒரு ரூபாய் நாணயத்தை கொட்டைபாக்கை நீரில் உரசினால் கிடைக்கும் பசையைக் கொண்டு ஒட்ட வைப்பர். அதனைத் தொடர்ந்து இறந்தவருக்கு ஈமக்கிரியை செய்ய வேண்டிய மகன் தேங்காய் உடைத்து பத்தி பொருத்தி வைத்து மரியாதை செய்தபின் அந்த உடைத்த தேங்காயில் எண்ணெய் ஊற்றி விளக்கேற்ற வேண்டும். 

ஒரு மரக்கால் நிறைய நெல் வைத்து அதன் மேல் உடைத்த தேங்காயில் எண்ணெய் ஊற்றி விளக்கேற்ற வைக்க வேண்டும். இறந்தவர்களின் காலடியில் நவதானியங்களைப் போட வேண்டும். அதனைத் தொடர்ந்து ஒவ்வொருவராக பத்தி தூபம் போட்டு வணங்க வேண்டும். இச்சடங்கு இறந்தவரை இறைவனுக்குச் சமமாக கருதுவதைக் குறிக்கிறது. இறந்த தகவலை உற்றார் உறவினருக்குத் தெரிவிக்க ஏற்பாடுகள் செய்த பின் இறந்த வீட்டின் முன் பந்தல் போட வேண்டும். ஈமக்கிரியைச் செய்யும் நாளில் உருமி அடிக்க வேண்டும். 

ஈமக்கிரியை செய்யும் முறை 

ஈமக்கிரியை செய்யும் நாளன்று விடியற்காலை உறுமிக்காரர்கள் ஊரில் வீதிதோறும் சென்று உறுமியடித்துத் தகவல் தெரிவித்ததும் சமுதாய மக்கள் வீடுதோறும் சிறிது அரிசி கொண்டு வந்து வீட்டுவாசலில் வைக்கப்பட்டுள்ள கூடையில் போட்டு விட்டு இறந்தவருக்கு இஞ்சலி செலுத்தி விட்டுச் செல்வர். இந்நிகழ்ச்சிக்கு வாய்க்கரிசி கொண்டு வருதல் என்று பெயர். இந்த அரிசியை உறுமிக்காரருக்குக் கொடுக்க வேண்டும். 

இறந்தவர் உடலை இறங்கு பொழுதான மதியம் 12 மணிக்கு மேல் எடுப்பது வழக்கம். அவ்வாறு எடுக்கையில் நல்ல நேரம் பார்த்து உரிய நேரத்தில் இறந்தவரின் சம்பந்தக்காரர்கள் இறந்தவர் ஆணாக இருந்தால் அவரது மனைவிக்கும், பெண்ணாக இருந்தால் இறந்த பெண்ணுக்கும் புதுப்புடவை கொண்டு வர வேண்டும். 

அந்த தெருவில் உள்ள வீட்டார் குளிப்பாட்டுவதற்காக குடத்தில் தண்ணீர் கொண்டு வர வேண்டும் அதனை தொடர்ந்து இறந்தவரைக் குளிப்பாட்டும் நிகழ்வு நடைபெறும், இதற்கென ஒரு பித்தளைத் தாம்பூலத்தட்டில் சிறிது கலக்கிய அரப்புத்தூள், ஒரு கிண்ணத்தில் நல்லெண்ணெய் ஆகியவற்றை தயார் செய்து இறந்தவருக்கு ஈமக்கிரியை செய்ய வேண்டிய மகன் முதலிலும் அதனை தொடர்ந்து இறந்தவரின் தாய்மாமன் வீட்டார் மற்றும் இறந்தவரது குடும்பத்தார் ஆகியோர் இடது புறங்கையால் இறந்தவரின் தலையில் எண்ணெய் அரப்பு முதலியவற்றைக் கீழிருந்து மேலாகத் தடவ வேண்டும். 

இந்த எண்ணை மற்றும் அரப்பு வைக்கும் சடங்கில் கலந்து கொள்பவர்கள் மூன்றாம் நாள் புத்தாடை உடுத்த வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது. உறவினர் எண்ணெய் அரப்பு வைத்து முடித்த உடன் இறந்தவரின் சம்பந்தக்காரர்கள் ஒன்று சேர்ந்து தெரு மக்கள் கொண்டு வந்த நீரைக் கொண்டு குளிப்பாட்டி இறுதியில் இறந்தவரின் வீட்டு நீர் ஒரு செம்பாவது ஊற்ற வேண்டும். 

குளிப்பாட்டியதும் ஒரு சிறு வெள்ளைத் துணியை உடலின் மேல் வைத்து அதனை தொடர்ந்து ஒரு நீளமான மல் துணியால் உடலை கால் முதல் தலை வரை சுற்றிக் கட்டிய பின் அலங்கரித்து மீண்டும் உறவினர்களால் பத்தி புகைகாட்டி வழிபட்ட பின் அலங்கரிக்கப்பட்ட தேருக்கு எடுத்து செல்ல வேண்டும். 

நீரில் ஊற வைத்த பச்சரிசி சிறிது மற்றும் இறந்தவரின் சம்பந்தக்காரர்களில் விதவையாக இருப்பவர்களால் வறுக்கப்பட்ட பச்சரிசி சிறிது ஆகியவற்றை இறந்தவருக்கு வாக்கரிசியாகக் கல்லறைக்கு உடன் எடுத்துச் செல்ல வேண்டும். தேருக்கு அடியில் வண்ணானால் கொண்டு வரப்பட்ட நான்கைந்து இதர நவதானியங்களை வண்ணான் எடுத்து செல்வது வழக்கம். 

இறந்தவரின் தாய்மாமன் தான் தேரை முன் நின்று இழுத்துச் செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும் போது சமுதாயத்திற்குப் பொதுவான கம்பளியைத் தோளில் போட்டு கொண்டு செல்ல வேண்டும். இந்நிகழ்ச்சிக்கு மோர் சுமத்தல் என்று பெயர். தாய்மாமனுடன் பிற சம்பந்தக்காரர்கள் ஒன்று சேர்ந்து தேரை கல்லரை வரை இழுத்துச் செல்லவேண்டும். 

அவ்வாறு செல்லும் போது இறந்தவரின் பேரன் நெய்பந்தம் பிடித்துச் செல்ல வேண்டும். பத்தி சாம்பிராணி புகை மற்றும் பன்னீர் தெளித்தல் போன்ற நிகழ்வுகளும் கல்லறைக்கும் செல்லும் வரையிலும் தொடர்ந்து நடைபெறும். உறுமியும் தொடர்ந்து அடித்துச் செல்ல வேண்டும். வழியில் கோவில்கள் இருந்தால் அப்பகுதிகளில் உறுமி அடிப்பதை நிறுத்தி விட வேண்டும். 

புதைத்தனும் எரித்தலும் 

இறந்தவரின் உடல் புதைக்கப்படலாம் அல்லது எரிக்கப்படலாம். இரண்டிலும் எது செய்யப்பட்டாலும் இறந்தவரின் உடல் குழிமேட்டில் வைக்கப்பட்டு அவரது முகம் வீட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட துணியால் மூடப்பட்டு இறந்தவரின் வாய்க்கு நேராகச் சிறிது கிழித்து விடப்பட்டு வீட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட நீரில் ஊற வைத்த பச்சரிசியில் ஏழு எடுத்து இறந்தவரின் வாயில் அவரது சகோதரர்களால் போடப்பட வேண்டும். இவ்வரிசி பொன்னரிசி எனப்படும். 

புதைக்கும் முறை 

இறந்தவரைப் புதைக்க வேண்டுமானால் உடலைக் குழிக்குள் வைத்து இறந்தவருக்கு ஈமக்கிரியை செய்ய வேண்டிய மகன் தன் இடது புறங்கையால் மூன்று முறை மண்ணைக் குழிக்குள் தள்ள வேண்டும். அதனைத் தொடர்ந்து மீதியுள்ள மகன்கள் மற்றும் உறவினர்கள் அவ்வாறே மண்ணைத் தள்ளி குழியை மூட வேண்டும். 


ஒக்கலிகர் - ஈமச் சடங்கு


எரிக்கும் முறை 

இறந்த உடலை எரிக்க வேண்டுமானால் இறந்த உடல் வைக்கோல் விறகு மற்றும் வறட்டியால் மூடப்பட்டு தலைப்பகுதியில் ஒரு குச்சி வைக்கப்பட்டு அதன் மேல் ஈரமண் கொண்டு மூடப்பட வேண்டும். 

ஈமச்சடங்கு செய்ய வேண்டிய மகன் தலைமுடியை மழித்து விட்டு சமுதாயப் பொது கம்பளியால் முக்காடிட்டுக் கொண்டு நீர் நிரம்பிய மண்பானையைத் தலையில் சுமந்து கொண்டு கல்லறையை மூன்று முறை வலமிருந்து இடமாகச் சுற்றி வர வேண்டும். அவ்வாறு சுற்றி வரும் போது ஒவ்வொரு முறை தலைப்பகுதிக்கு வரும் போது நாவிதர் (Barber) அப்பானையில் அரிவாளால் துளையிட வேண்டும். மூன்றாம் முறையில் அப்பானையைக் கீழே போட்டு உடைத்துவிட்டு கொள்ளி வைத்து விட்டு திரும்பிப் பார்க்காமல் திரும்ப வேண்டும். இச்சடங்கு நடைபெறும் போது உறுமி மிகவும் மெதுவாக அடிக்கப்பட வேண்டும். 

ஈமச்சடங்கு செய்து முடித்த உடன் இச்சடங்கைச் செய்தவர் பொன்னரிசி ஊற வைத்த நீரில் சிறிது சாணம், இலை மற்றும் அருகம் புல் கலந்து தயாரிக்கப்பட்ட நீரை உறுமிக்காரரிடம் வாங்கி சிறிது பருகிவிட்டு கையைக் கழுவி விட்டு உறுமியில் குச்சியால் மூன்று முறைத் தட்டி விட்டு வீடு திரும்ப வேண்டும். 

இறந்த வீடு அமைந்த தெருவில் வசிப்போரிடம் வீடுதோறும் பணம் வசூலித்து ஒரு குறிப்பிட்ட தொகையை இறந்த வீட்டிற்கு ஈமக்கிரியைச் செலவு என கொடுக்கும் வழக்கம் உள்ளது. இந்த தொகை 'கட்டப்பனை'  அல்லது ”போடுபணம்” என்று அழைக்கப்படுகிறது. 

ஈமக்கிரியை செய்யும் சடங்கில் இறந்தவரின் பங்காளிகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடும் விதிக்கப்பட்டு அவர்களின் வருகையைச் சரிபார்க்கும் பழக்கமும் நடைமுறையில் உள்ளது. 

இந்த பழக்கவழக்கங்களை காணும் பொழுது இச்சமுதாய முன்னோர்கள் சமூக ஒற்றுமையுடன் வாழ்ந்ததற்கான நல்ல பழக்கவழக்கங்களைப் பின்பற்றியுள்ளனர் என்பது தெளிவாகிறது. 

ஈமக்கிரியை செய்து முடித்தவர் வீட்டுவாசலில் தலையிலிருந்து நீர்விட்டு குளித்துவிட்டு வாசலில் போடப்பட்டுள்ள உலக்கையைத் தாண்டி விட்டு வீட்டினுள் செல்ல வேண்டும். 

பின்குறிப்பு 

ஒரு ஆண் இறக்கும் போது அவரது மனைவி உயிரோடு இருந்தால் அப்பெண்ணின் உடன் பிறந்த சகோதரர்கள் அப்பெண்ணுக்கு கண்ணாடி வளையல்கள் குங்குமம் மற்றும் பூ வாங்கி கொண்டு வந்து அவரது மனைவியால் இறந்தவரின் மனைவிக்கு அணிவிக்க வேண்டும். உடலை குளிப்பாட்டி தேரில் ஏற்றும் முன் உடலின் காலடியில் வைத்து இறந்தவரின் மனைவியை மஞ்சள் பூசி குளிப்பாட்டி பிறந்த வீட்டுப் புதுப்புடவை உடுத்தச் செய்து ஒரு விதவைப் பெண்ணால் அக்கண்ணாடி வளையல்கள் உடைக்கப்பட வேண்டும். 

ஒரு பெண் இறக்கும் போது அவரது கணவன் உயிரோடு இருந்தால் இறந்த பெண்ணின் சகோதரர்கள் பூமாலை, கண்ணாடி வளையல், மஞ்சள், குங்குமம் வாங்கி வந்து இறந்த உடலுக்கு அணிவிக்க வேண்டும். 

ஒரு விதவை பெண் இறந்தால் பிறந்த வீட்டிலிருந்து புடவையும் மாலையும் மட்டும் வாங்கி வந்து அணிவிக்க வேண்டும். 

ஈமச்சடங்கில் பல்வேறு முறைகள் 

1. குழந்தை பிறந்த மூன்று நாட்களுக்குள் இறந்தால் அக்குழந்தை வீட்டிலேயே புதைக்கப்பட வேண்டும். 

2. பல் விழுந்து முளைக்கும் பருவத்தில் குழந்தை இறந்தால் கல்லறைக்குத் தொட்டி கட்டி எடுத்து செல்ல வேண்டும்.

3.திருமணமாகாத ஆணோ, பெண்ணோ இறந்தால் எருக்கம்பூ மாலை அணிவித்து எருக்கம் முள்ளில் காது குத்தப்பட்டு மூங்கிலால் செய்யப்பட்ட ஏணியில் எடுத்துச் செல்ல வேண்டும். 

4. அறுபது வயதுக்கு மேல் இறக்கும் நபரை அலங்கரிக்கப்பட்ட தேரில் எடுத்துச் செல்ல வேண்டும். 

மேலும் வாசிக்க ...
  • மூன்றாம் நாள் சடங்கு
  • பன்னிரண்டாம் நாள் வழிபாடு
  • வருடாந்திர வழிபாடு