ஒக்கலிகர் சடங்குகள் - நிச்சயதார்த்தம்


ஒக்கலிக சமூகத்தைப் பற்றி ஆராய்ச்சியாளர்களின் ஆய்வுப்படி இச்சமூகத்தின் தோற்றம் இமயமலைப் பகுதியாக இருப்பதால் இச்சமூகத்தின் சடங்குகள் திராவிட நாகரிகத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. 

இச்சமூகத்தில் ஒரு மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை நிகழும் எல்லா நிகழ்வுகளிலும் தாய்மாமன் பங்கு முக்கியத்துவம் பெறுகிறது.
நிச்சயதார்த்தச் சடங்கு 

இது திருமணத்திற்கு முன் உறுதி செய்வதற்காக நிகழ்த்தப்படும் நிகழ்ச்சியாகும். இவ்விழா மணப்பெண்ணின் வீட்டில் நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் மணமகன் மற்றும் மணமகளின் தாய்மாமன் பங்கு முக்கியமானதாகும். இரு தாய்மாமனாரின் சம்மதத்தின் பேரிலேயே இவ்விழா தொடர்ந்து நடைபெறும் ஏனெனில் ஒரு மணப்பெண்ணையோ, ஆணையோ திருமணம் செய்யும் முதல் உரிமை அவரவர் தாய்மாமன்களுக்கே உரியதாகும். 

மேலும் வாசிக்க : -
மணமகன் வீட்டார் நிச்சயதார்த்தப் பொருள்கள் என நிச்சயதார்த்தப் புடவை, சோப்பு, சீப்பு, கண்ணாடி உள்ளிட்ட பொருட்கள் தேங்காய், பழவகைகள் என அனைத்தையும் கொண்டு வந்து மணமகள் வீட்டில் விரிக்கப்பட்ட கம்பளத்தில் வைத்த பின் இரு வீட்டாரின் சம்மதத்தைக் கேட்டறிந்த பின் இருதரப்பு தாய்மாமன்களும் வெற்றிலை பாக்கு மாற்றிக் கொள்ள வேண்டும்.


Vokkaligar Engagement History
ஒக்கலிகர் சடங்குகள் - நிச்சயதார்த்தம்


அதனைத் தொடர்ந்து மணமகனின் தாய்மாமன் மணமகன் வீட்டார் கொண்டு வந்த மணமகளுக்கான நிச்சயதாட்ாத்த புடவை மற்றும் இதர பொருட்களைப் பெற்று அதனை மணமகளின் தாய்மாமனிடம் ஒப்படைப்பார் மணமகளின் தாய்மாமன் அப்புடவையைப் பெற்று அவர்தம் மனைவியிடம் கொடுத்த பின் அப்புடவையை மணமகளை அணியச் செய்து மணமகன் வீட்டார் முன் அழைத்து வந்து நிறுத்தி அறிமுகப்படுத்தும் பணி மணமகளின் தாய்மாமனின் மனைவியைச் சேர்ந்ததாகும். 

அதனைத் தொடர்ந்து மணமகனையும் மணமகளையும் இருவீட்டாரும் அவர்தம் உறவினரும் சந்தனம், குங்குமம் வைத்து ஆசிர்வதிப்பார்கள். அந்த காலத்தில் மணமகனின் வீட்டார் நிச்சயதார்த்தச் சீர்வரிசையாக விறகுக்கட்டு, மூங்கில், ஆமணக்கு மற்றும் கொள்ளு கொண்டு வருவதும் மணமகளின் வீட்டின் முன் பந்தல் போட்டு வாழை மரம் கட்டுவதும் வழக்கத்தில் இருந்திருக்கிறது. 

புடவை உடுத்தும் விழா 

இந்த நிச்சயதார்த்த விழாவின் மற்றோர் நிகழ்வாக மணமகளின் வீட்டார் தம் உறவினருடன் மணமகன் வீட்டிற்குச் சென்று அங்கே மணமகனின் வீட்டாரால் மணமகளின் தாய்க்கு புடவை வழங்கப்படுவதும் அப்புடவையை மணமகளின் தாய் ஏற்று உடுத்தி வருவதும் இருவீட்டாரும் சம்பந்தம் செய்து கொள்வதற்குச் சம்மதம் தெரிவிப்பதற்கு அடையாளமாக விளங்குவதற்காக நடத்தப்படும் விழாவாகும். இப்புடவை உடுத்தும் விழா இச்சமூகத்தின் சிறப்பம்சமாக விளங்குகிறது.